×

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் பருவமழை எதிரொலியால் தாமதமாக துவங்கிய ஆடிபட்டம்

*உழவடை பணியில் விவசாயிகள்

ஆண்டிபட்டி : தென்மேற்கு பருவ மழை எதிரொலியால் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உழவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்நகரைச் சுற்றியுள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கணேசபுரம், சித்தார்பட்டி, புள்ளிமான்கோம்பை, கரட்டுபட்டி, சீரங்கபுரம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில் ஏராளமான விவசாயிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பருவமழைகள் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வறண்டது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்து, பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகி வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை எதிரொலியால் கடந்த வாரத்தில் இப்பகுதியில் பெய்த கனமழையால் ஒரு சில பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியது.

மேலும் மானாவாரி விவசாயிகள் தற்போது உழுது கொண்டே, விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை ஆடிபட்டம் முடிந்தபின்பு பெய்ததால், ஆடிப்பட்டம் விதைப்பு பணியும் தாமதமாக துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடை தீவனங்களுக்காக கம்பு, சோளம் போன்ற தானியங்களை விதைத்து வருகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் விதைக்கப்பட்ட துவரை ஓரளவு கைகொடுக்கும் என்று தெரிவித்தனர்.

Tags : Andipatty, Aadipattam,Farmers, Yield
× RELATED விவசாயிகள் சங்க கூட்டத்தில் மோதல்