மலை ரயில் தண்டவாளத்தில் போட்டோ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

*தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஊட்டி :  நீலகிரி மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி  எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் நீராவி எஞ்சின் பொருத்திய மலை ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

alignment=

 இதனால், எப்போதும் இந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. மேலும், பெரும்பாலும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மூலமாகவே புக்கிங் ஆகிவிடுவதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு இந்த மலை ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், ஊட்டி வரும் வெளிமாநில மற்றும் வெளி நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளாகின்றனர்.

 எனவே, அனைத்து சுற்றுலா பயணிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் தற்போது ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேபோல், ரயில் புறப்படுவதற்கு முன் இந்த எஞ்சின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கின்றனர்.

 அதேபோல், ரயில் வரும் சமயங்களில் தண்டவாளங்களை கடந்து செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இதனை தடுக்க தற்போது தெற்கு ரயில்வே அபராதம் அறிவித்துள்ளது. தண்டவாளங்களில் இருந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதமும், ரயில் வரும் சமயங்களில் தண்டவாளங்களை கடந்து சென்றால் ரூ.1000 அபராதமும், டிக்கெட் இன்றி பிளாட்பார்களில் இருந்தால் ரூ.1000 விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுதவிர ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் குப்பைகள் போட்டால் ரூ.200ம், அசுத்தம் செய்தால் ரூ.300ம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நோட்டீஸ்கள் ஊட்டி ரயில் நிலையம், குன்னூர் மற்றும் கேத்தி போன்ற ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

Related Stories: