அறநிலையத்துறை அலட்சியத்தால் பர்வதமலை அடிவாரத்தில் பட்டுப்போகும் மா மரங்கள்

*பொதுமக்கள் குற்றச்சாட்டு

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே பர்வதமலை அடிவாரத்தில் இந்து அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் மா மரங்கள் பட்டுப்போவதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பர்வதமலை சிவன் கோயிலுக்கு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மலை அடிவாரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கடந்த 20 ஆண்டுகளாக மா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மகசூல் நடைபெறும் நேரத்தில் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டும் மா மரங்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்குள்ள மா மரங்கள் திடீரென காய்ந்து வருகிறது. அதிக மகசூல் பெறுவதற்காக மருந்துகளை பயன்படுத்தியது தான் மரங்கள் பட்டுப்போவதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பர்வதமலை உள்ளது. இங்குள்ள மா மரங்களை பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தவறவிட்டதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.

மழைநீரை சேமிக்கவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியில் பல்வேறு துறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்,  20 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மா மரங்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகளின் செயல் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பட்டுப்போன மரங்கள், மீதமுள்ள மரங்களை பாதுகாக்க வேளாண்மை துறை அதிகாரிகளை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: