20 ஆண்டுகளுக்குப் பிறகு வடிகால் உலை வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்

*விவசாயிகள் மகிழ்ச்சி

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே 20 ஆண்டுகளுக்குப் பிறகு வடிகால் உலை வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்குராஜன் பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து கொள்ளிடம் ஆற்றில் நாதல்படுகை என்ற இடத்தில் கலக்கும் வடிகால் வாய்க்கால் உலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் சேரும் களிமண்ணும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படுவதால் இந்த வாய்க்காலுக்குள் இறங்கி தூர்வாருவதில் சிரமம் இருந்து வந்தது.

இதனால் காலதாமதமும், குறிப்பிட்ட நேரத்தில் தூர்வாரமுடியாமல் வேலைச்சுமையும் இருந்ததால் கடந்த 20 ஆண்டு காலமாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் தனித்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மழை பொழிவு இல்லாமல் போனதால் வாய்க்கால் வறண்டு காணப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இந்த வாய்க்கால் பொக்லைன் எந்திரம் கொண்டு பொதுப்பணித்துறையினரால் நேற்று முன்தினம் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுமார் 2000 ஏக்கர் நிலங்களுக்கு வடிகால் வசதியாக இருந்து வரும் இந்த வாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டதால் மழைக்காலத்தில் தேங்கும் அதிகப்படியான தண்ணீரை எளிதில் இந்த உலை வாய்க்கால் கொள்ளிடம் அற்றுக்குள் வெளியேற்றிவிடும் என்றனர். கடந்த 20 ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: