பரமன்குறிச்சி அருகே வட்டன்விளையில் 2.6 கிமீ சாலையில் 29 வேகத்தடைகள்

*வாகன ஓட்டிகள் பாதிப்பு

உடன்குடி :  பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளையில் இருந்து வெள்ளான்விளை வரை செல்லும் சாலையில் 29 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் பரமன்குறிச்சியில் இருந்து வட்டன்விளை, வெள்ளாளன்விளை இணைப்புச் சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே பனை மற்றும் அதனைச் சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர். சில பகுதிகளில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 2.6கிமீ தொலைவு உள்ள வட்டன்விளையில் இருந்து வெள்ளாளன்விளை சாலை கடந்த ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.64.19லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. மேலும் 5வருடம் பராமரிப்புத் தொகையாக ரூ.9.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சாலையின் ஓரங்களில் சரள் மண் அடித்து சாலையை பலப்படுத்தியுள்ளனர். கிராமப்புறச் சாலையான இந்த சாலையில்  அனைத்து வளைவுகளிலும் முன் பின்  ராட்சத வேகத்தடை அமைத்துள்ளனர்.

வட்டன்விளையில் இருந்து வெள்ளாளன்விளை வரையிலான 2.6 கிமீ சாலையை கடக்க 29 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசபடவில்லை.  இதனால் வேகத்தடை வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பைக்குகளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.  எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடங்களை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு  தக்க நடவடிக்கை எடுத்து வேகத்தடையை முறைப்படுத்துவதுடன், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: