ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட கும்கி யானைகள் வருகை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி

ஓசூர்: ஓசூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்திபிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பாகலூர், கெலவரப்பள்ளி அணை பகுதிகளில் சுற்றி வரும் யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கதிரேபள்ளி எனும் இடத்தில் 2 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே இடத்திற்கு வந்த கொம்பன் யானை அடுத்தடுத்த நாட்களில் 3 பேரை கொன்றது. அந்த சமயம் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதியில் அதனை விட்டனர். மீண்டும் அதே யானை தற்போது இந்த பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் விலை நிலங்களை சேதப்படுத்துவதால் அதனை உடனே பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கொம்பன் யானையுடன் மார்க் என்ற மற்றொரு காட்டுயானையும் சேர்ந்து வந்துள்ளது.

மேலும் தற்போது ஊருக்குள் புகுந்த கொம்பன் யானை இதுவரை 7 பேரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள இந்த 2 யானைகளையும் விரட்ட ஆணை மலைப்பகுதியில் இருந்து மாரியப்பன் என்ற கும்கி யானையும், முதுமலை பகுதியில் இருந்து பரணி என்ற கும்கி யானையும் வரவைக்கப்பட்டுள்ளன. இந்த 2 காட்டுயானைகளையும் பிரித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே இந்த காட்டுயானைகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இந்த 2 காட்டுயானைகளை பிடிப்பதற்காக ஓசூர், சூளகிரி போன்ற வனப்பகுதியை சார்ந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 பேர் கொண்ட மருத்துவக்குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக யானையை பிடிக்கும் பணியில் தோய்வு ஏற்பட்ட நிலையில், வனத்துறையினரின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளன.

Related Stories: