இரும்பு சங்கிலியால் ஒரு கையை கட்டிக்கொண்டு கடலில் 10 கி.மீ தூரம் நீச்சலடித்து நாகை மாணவர் உலக சாதனை

*3 மணி நேரத்தில் கடந்தார்

நாகை : நாகையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒரு கிலோ எடையுடைய இரும்பு சங்கிலியால் தனது ஓரு கையை கட்டிக் கொண்டு, கடலில் 10 கிலோ மீட்டர் தூரம் நீச்சலடித்து உலக சாதனை முயற்சி செய்தார். நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்- பவளக்கொடி தம்பதியர் மகன் சபரிநாதன்(22). இவர் நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சிறு வயது முதல் நீச்சல் மீது தீராத மோகத்தால் சபரிநாதன் சுனாமிக்கு பின், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் கடுமையாக நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு மாநில அளவில் பிரீ ஸ்டைல், பட்டர் பிளை, பிரெஸ்ட் ஸ்டோக் போன்ற பல்வேறு பிரிவுகளில் 700 க்கும் மேற்பட்ட தங்க பதக்கம் பெற்றார்.

தேசியளவில் 7 தங்கம் என்பதோடு நில்லாமல் கடந்த 2014 ம் ஆண்டு நைஜிரீயா நாட்டின் சைப்ரல் நகரில் நடந்த உலகளவிலான பைலாத்தான் போட்டியில் பங்கு பெற்று பதக்கத்தை பெற்றார். லட்சிய வெறியோடு சாதிக்க நினைத்த அவர் கடந்த 2017ம் ஆண்டு கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டு நாகூர் துறைமுகத்தில் இருந்து நாகை வரை, 5 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

தற்போது உலக சாதனை படைக்க முடிவெடுத்த சபரிநாதன், வேளாங்கண்ணி கடற்கரையில் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் ஒற்றை கையை கட்டிக்கொண்டு மற்றொரு கையால் வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைக்க முடிவெடுத்தார்.அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடற்கரையில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு நீச்சலடிக்க துவங்கிய சபரிநாதன், நாகை அக்கரைப்பேட்டைக்கு காலை 11.17 மணிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 17 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

அக்கரைபேட்டை வந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் தேசிய கொடியை போர்த்தி வரவேற்றனர்.வில் மெடல் ஆப் ரெக்கார்டு அமைப்பின் தலைவர் கலைவாணி மேற்பார்வையில், நடைபெற்ற சாதனை நிகழ்வை டிஎஸ்பி முருகவேலு தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அதிகாரிகள், நாகை தாசில்தார் சங்கர், மீனவ கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: