×

பால் விலை உயர்வால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

*வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்

ஈரோடு : பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதனால், வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி செக்போஸ்ட் அருகில் வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும்.  இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்தும், கரூர், நாமக்கல், கோவை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

மாடுகளை வாங்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கோவா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வர். வாரந்தோறும் பசு, எருமை, கன்றுகள் உட்பட 800 முதல் 1200 மாடுகள் வரை வரத்தாகி, அதில் 85 சதவீதம் முதல் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், தமிழக அரசு பால் கொள்முதல் விலையை கடந்த 17ம் தேதி லிட்டருக்கு 6 ரூபாயை அதிரடியாக உயர்த்தியது.

இதனால், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தைக்கு நேற்று பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதனால், வெளிமாநில வியாபாரிகள் சந்தைக்கு வந்த மாடுகளை குறைந்த எண்ணிக்கையில் வாங்கி சென்றனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,`பால் கொள்முதல் விலை உயர்வால் நேற்று நடந்த சந்தைக்கு கறவை மாடுகள் குறைவாக வந்தது. வெளிமாநில வியாபாரிகள் வழக்கம் போல் வந்திருந்தனர்.

ஆனால், மாடுகள் குறைவாக வந்ததால், 5 மாடுகள் வாங்க வேண்டியவர்கள் கூட ஒன்று அல்லது இரண்டு மாடுகளை மட்டுமே வாங்கி சென்றனர். நேற்று நடந்த சந்தையில் பசு-250, எருமை-200, கன்று-150 என 600 மாடுகள் வந்தது. இதில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது’ என்றார்.

Tags : Milk , rate increases,Cow Market,Erode,Karukalpalayam
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்