திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்கு ஸ்கேன் எடுக்க 3 மாதம் காத்திருக்கும் அவலம்

*நோயாளிகள் கடும் அவதி

திருச்சி : திருச்சி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி மற்றும் டாக்டர் பற்றாக்குறையினால் சிறுநீரக பிரச்னைக்கு ஸ்கேன் எடுக்க 3 மாதத்திற்கு பிறகு வரச்சொல்லுவதால் நோயாளிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மல்டிபெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளி்ட்ட மாவட்டங்களிலிருந்தும் நோயளிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். ஏழைகளின் நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனையில் தற்போது மாதங்கள் கழித்துதான் சிகிச்சை செய்யும் அவலநிலை உள்ளது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுநீரக கல் பிரச்னைக்கு சென்றால் (usg-Abd-pelvis) என்ற ஸ்கேன் எடுக்க புற நோயாளிகளுக்கு 3 மாதம் கழித்து வருமாறும் உள்நோயாளிகளுக்கு மட்டும் உடனே எடுப்போம் எனக் கூறி அனுப்பி விடுகின்றனர். ஏன் 3 மாதம் என்று கேட்டால் ஸ்கேன் எடுக்கும் இயந்திரம் ஒன்று மட்டும் உள்ளது. மேலும் டாக்டர் பற்றாக்குறை எனக் கூறுகின்றனர். செவிலியர் மாணவி பிறகு சீல் (தேதி குறிப்பிட்டு) வைத்து கொடுத்துவிட்டு நோயாளியை அனுப்பி விடுகின்றனர்.

இதனால் நோயாளிகளுக்கு சிறுநீரக கற்கள் பெரிதாக வளர்ந்து வலி ஏற்பட்டு உள்நோயாளியாக சேர்ந்து அவதிப்பட்டு, துடிதுடித்தால் மட்டும் உடனே ஸ்கேன் எடுக்க முடியும். சிறிய சிறுநீரக கற்களாக இருக்கும்போது அதை கரைக்க மருத்துவம் பார்க்க முடியாத அவல நிலை தொடர்கிறது. பெண்கள் வயிற்று வலியால் அவதியுறும் இது போன்ற பல பிரச்னைக்கு இவ்வாறே அலைக்கழிக்கப்படுகின்றனர் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் என கூறுப்படுகிறது.

இது குறித்து மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் கூறுகையில், சிறுநீரக கல் சம்பந்தமான பிரச்னைக்கு 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவர்களுக்கு தினசரி மருத்துவம் பார்ப்பதில்லை. மாறாக வாரம் 3 நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை தான் பார்க்கப்படும் என தனியார் மருத்துவமனைபோல போர்டு உள்ளது. இதன் மூலம் டாக்டர் பற்றாக்குறை உள்ளது என தெரிகிறது. மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதார துறை செயலாளர் இதில் தலையிட்டு புதிய ஸ்கேன் இயந்திரம் கூடுதலாக ஒன்று வாங்கி பொருத்த வேண்டும். தேவையான மருத்துவர்களை அமர்த்தி மக்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே மருத்துவமனை நிர்வாகம் 3 மாதம் வரை நோயாளிகள் காத்திராமல் இருக்க உடனடியாக ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: