கோபி அருகே ஆக்கிரமிப்பு அகற்றவந்த கிராம மக்களை தாக்க முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளர்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள சிறுவலூர் செங்குளம் குட்டையில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இதை கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அத்திக்கடவு அவிநாசி் திட்டத்தில் இந்த குளம் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்புள்ள  குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.  இந்நிலையில், குளத்தின் ஒரு பகுதியை அதிமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் கரை அமைக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள மனோகரன் குடிமராமத்து பணியில் ஈடுபட்டவர்களை பணி செய்யவிடமால் தடுத்ததுடன், குளத்தின் கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளார்.

 இதுகுறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனோகரனிடம் கேட்டபோது அவர்களை தாக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூர்வாரி வருகின்றனர். தமிழக அரசு குடிமராமத்து பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளரே குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: