திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் திடீர் மறியல்: அரை நிர்வாணத்துடன் கலெக்டர் ஆபீசில் நுழைந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாய கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், பயிர் காப்பீடு உடனடியாக வழங்குதல், விவசாய கடனுக்காக ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் தடையை மீறி அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்துக்குள் முழக்கமிட்டபடி சென்றனர். அப்போது திடீரென அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், சட்டையை கழற்றிவிட்டு அரை நிர்வாணத்துடன் முழக்கமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து  விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், அரை நிர்வாணத்துடன் அலுவலகத்துக்குள் நுழைந்து முழக்கமிடுவது சரியான செயல் இல்லை. இதுபோன்ற போராட்டத்தை தவிர்க்க வேண்டும்’ என இரு கைகளையும் கூப்பி கேட்டுக்கொண்டார். அதற்கு அய்யாக்கண்ணு, பயிர் காப்பீடு, வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே போராட வேண்டியிருக்கிறது என தெரிவித்தார். அதன்பின் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: