×

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 4 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு

ஈரோடு: ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிராப்ஸ்மேன் ஆகிய பணியிடங்களுக்கு ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் செப்.2ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஈரோடு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பித்தனர். தேர்வில் பங்கேற்க தகுதி உள்ள 30 ஆயிரம் பேருக்கு மட்டும் ராணுவம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
 இந்நிலையில், ஆள்சேர்ப்பு முகாம் நேற்று காலை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் முகாமில் பங்கேற்க கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி வந்திருந்த இவர்களுக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கர்னல் ஆர்.ஜே.ரானே தலைமையில் ஆள் சேர்ப்பு பணி தொடங்கியது. முன்னதாக, தேர்வர்கள் வரவழைத்து மைதானத்தில் 400 மீட்டர் கொண்ட ஓடுதளத்தில் 4 ரவுண்ட் (1600 மீட்டர்) ஓட வைக்கப்பட்டனர். இதில், சிலர் ஓட முடியாமல் 2வது, 3வது ரவுண்டிலேயே  மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முகாமில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நான்கு ரவுண்டையும் 5 நிமிடம் 30 விநாடியில் ஓடி கடந்தவர்களை முதல் பிரிவாகவும், 5 நிமிடம் 31 விநாடி மற்றும் 5 நிமிடம் 45 விநாடிகளில் கடந்து வந்தவர்களை இரண்டாவது பிரிவாகவும் தேர்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து, உடல் திறனறிதல் தேர்வும், தகுதி தேர்வும் நடந்தது. இதில், நீளம் தாண்டுதல், உடல் நிலை தன்மை (ஜிக்-ஜாக்), கம்பியில் உடலை மேல் இழுத்தல் (புல்-அப்ஸ்) போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டது.

இதில்,  500 பேர் தேர்வாகினர். பின்னர், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைத்து உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கோவையில் அக்டோபர் 27ம் தேதி நடக்கும் எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டை ராணுவ அதிகாரிகள் வழங்கினர். எழுத்து, மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (23ம் தேதி) தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Erode WUC Ground, Military, Recruiting Camp, Youth
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு