உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் டெண்டருக்கு எதிராக மனு செய்தவருக்கு அபராதம்

மதுரை:  திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேதசங்கரநாராயணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மண்டலங்களில் நெல், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை 1.9.2019 முதல் 31.8.2021 வரை, வாகனங்களில் கொண்டு செல்வதற்கான டெண்டர் அறிவிப்பு நிர்வாக இயக்குநரால் கடந்த ஜூலை 19ல் வெளியிடப்பட்டது. இதில் பங்ேகற்க விரும்பும் தகுதியுள்ள ஒப்பந்தாரர் ஆக.7 முதல் ஆக.13வரைக்குள் விண்ணப்பிக்க  கூறப்பட்டிருந்தது. டெண்டர் விதிப்படி அறிவிக்கப்பட்டது முதல் விண்ணப்பிப்பது வரை 30 நாள் கால அவகாசம் வேண்டுமென்பது விதி.

இந்த விதியை பின்பற்றாததால், என்னைப் போன்ற பலர் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதை தடை செய்து புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், டெண்டர் பணிகள் முடிந்துவிட்டன என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனு நிலைக்கதக்கதல்ல எனத் தெரிந்தும் மனு செய்ததால் மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Tags : Food items, fine
× RELATED கொசப்பூர் மயான பூமி சீரமைப்பு