×

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது

குளச்சல்: கன்னியாகுமரி  மாவட்டம்  அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக  வீடுகளுக்குள்  நீர் புகுந்தது. இதனால் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலை ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்தது. மழையால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு மாணவ மாணவிகள் நனைந்துகொண்டே சென்றனர். நாகர்கோவில் நகர பகுதியில் அசம்பு ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை வெள்ளமும், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே,  நேற்று முன்தினம் நள்ளிரவு அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. பல அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் மணல்   பரப்பை தாண்டி ஊருக்குள் புகுந்தது.

 இதனால் அழிக்கால் கிழக்கு தெரு மற்றும் பிள்ளை தோப்பு பகுதிகளில் சுமார் 70 வீடுகளுக்குள் மணலுடன் கடல்நீர் புகுந்தது. கடல் அலை   தாக்கிய வேகத்தில் வீடுகளுக்குள் இருந்த டிவி, மிக்சி,   கிரைண்டர் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், மின்னணு பொருட்களும் நாசமடைந்தன.  பல பொருட்களை கடல் அலை இழுத்து சென்றது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு   வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம்   அடைந்துள்ளனர்.
பின்னர், கடல் நீர் ஊருக்குள் புகுவதை   தடுக்க வலியுறுத்தி கல்லுக்கட்டி   சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் திடீர்   சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் திமுக மாவட்ட   செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்   வக்கீல் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது குளச்சல் நோக்கி சென்ற 3 அரசு பஸ்கள், ஒரு தனியார் சொகுசு பஸ், டிப்பர்   லாரி உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

தகவலறிந்து, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார்,  மணவாளக்குறிச்சி போலீசார் வந்து பொதுமக்களுடன்  பேச்சுவார்த்தை   நடத்தினர். ஆனால் கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சுமார் 5 மணி நேரத்திற்கு பின் சப் கலெக்டர் வந்து, ‘10 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க நபார்டு வங்கி நிதி அனுமதித்துள்ளது. அது வந்ததும் பணி தொடங்கும்’ என்று உறுதியளித்தார். இதன்பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Maiden, sea furious, sea
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...