×

எட்டு வழிச்சாலை திட்டம் சட்டவிதிகளின்படி உருவாக்கப்பட்டதா? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி,.. பதிலளிக்க மத்தியஅரசு திணறல்

சென்னை: சேலம் -சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் சட்ட விதிகளின்படிதான் உருவாக்கப்பட்டதா என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி உள்ளது.
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு அரசாணையை வெளியிட்டது. இதையடுத்து திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி தமிழக அரசு நில அளவீட்டை தொடங்கி கல் நடும் பணிகளை மேற்கொண்டது. இதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வனங்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், பாமக தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் -சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஆகஸ்ட் 22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் சந்தான கவுடர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதத்தில், “இது வளர்ச்சிக்கான திட்டம். கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு போதிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இதில் சுற்றுச்சூழல் துறை தரப்பில் அனுமதி வழங்கும் வரை திட்டத்தை நாங்கள் செயல்படுத்த மாட்டோம். மேலும் இந்த திட்டம் மக்களுக்கு எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது என தெரிவித்து திட்டத்திற்கான வரைபடத்தின் நகலை நீதிபதியின் முன்னிலையில் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு வாதத்தில், “சேலம் -சென்னை சாலை திட்டத்தால் குடியிருப்பு பகுதி, விவசாய நிலம் என இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். இந்த திட்டம் என்பது பல்வேறு நீர்நிலைகளை அழிப்பதால்தான் சுற்றுச்சூழல் துறை தற்போது வரை அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது. இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருவது கிடையாது’’ என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் உருவாக்கப்பட்டதா? அப்படியென்றால் ஏன் இதுவரை சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லை. இது கிடைக்க எவ்வளவு காலம் ஆகும். ஒரு திட்டத்தை உருவாக்க நினைக்கும் போதே அதற்கான நிலத்தை வரையறை செய்து இருக்க வேண்டாமா? மேற்கண்ட திட்டத்தில் நிலம் எந்த அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டது, விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா, சுற்றுச்சூழல் துறை அனுமதி நிலவரம் என்ன, இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் தான் வருகிறதா அல்லது இது முற்றிலும் புதிய திட்டமா என்பது தொடர்பாக முழு விளக்கத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதில் நீதிபதிகள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு ஒரு சரியான பதிலைகூட தெரிவிக்க முடியாமல் மத்திய அரசு திணறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Eight Road Plan, Supreme Court, Central Government
× RELATED திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை