ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு; காங்கிரஸ் கட்சியினர் கைது: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு சாலைமறியல் செய்த 100க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். அப்போது, காங்கிரசாருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக பாஜ அரசு அவரை கைது செய்திருப்பதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் கைது கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதைடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

சென்னையில், 4 மாவட்டங்களும் சேர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் இருந்து அண்ணா சாலை வரை பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், போலீசார் அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. தடையை மீறி போராட்டம் நடத்த காங்கிரசார் திட்டமிட்டதால் சத்தியமூர்த்தி பவனை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, காங்கிரசார் காலை முதலே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் குவியத் தொடங்கினர்.  மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா,  கீழானூர் ராஜேந்திரன், ஜி.கே.தாஸ், உ.பலராமன், இரா.மனோகர், ரங்கபாஷ்யம்,  எஸ்.கே.நவாஸ், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட  ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்து அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் இருந்து புறப்பட்டு அண்ணா சாலைக்கு பேரணியாக செல்ல முயன்றனர். சாலைக்கு வரக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் சத்தியமூர்த்திபவன் நுழைவாயிலில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி வீசினர். அவர்களை போலீசார் கயிறு கட்டி தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரையும் தாண்டி குதித்த தொண்டர்கள் ஜி.பி. ரோட்டில் வாகனங்களை மறித்து நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி வந்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

பின்னர் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக அழைத்து வேனில் ஏற்றினர். அப்போது சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேற முயன்ற அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி ராயப்பேட்டையில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவங்களால் நேற்று காலை முதல் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்ததால் பாதுகாப்பு கருதி சத்தியமூர்த்தி பவனை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலையில் கைதானவர்களை போலீசார் விடுவித்தனர்.

முக்கிய தலைவர்கள் மிஸ்சிங்

தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் 4 மாவட்டம் சார்பில் நடத்திய இந்த போராட்டத்தில் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளாதது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ராஜிவ் காந்தி பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட மூத்த தலைவர்களில் பலர் இந்த போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் செயல் தலைவர்களோ, எம்பிக்களோ, எம்எல்ஏக்களோ என ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

Related Stories: