×

7 ஆண்டுகளில் பல கோடி சுருட்டியது அம்பலம் சிடி கட்டணமாக பெற்ற பல கோடி எங்கே போனது? விளக்கம் கேட்டு பதிவுத்துறை ஐஜி அதிரடி அறிக்கை

சென்னை: சிடி கட்டணம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பத்திரப்பதிவு நிகழ்வின்போதும் வெப் கேமரா வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் காட்சிகளை சிடியில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு பதிவுக்கும் ₹50 சிடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் சிடி வழங்காத நிலையிலும், சிடிக்களுக்கான கட்டணம் மட்டும் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவு அலுவலகங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் பத்திரங்கள் பதிவாகும் நிலையில் சிடி தராமல் ₹4 லட்சம் வரை கட்டணம் முறைகேடாக வசூலிக்கப்பட்டு வந்தது.இந்த பணத்தை ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே கணக்கு காட்டியது. ஆனால், கட்டணம் பெற்றதற்கான தொகை பல சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு கணக்கில் காட்டவில்லை. அவர்களின் சொந்த கணக்கிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த புகாரை அடுத்த பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2012 முதல் 2019 ஏப்ரல் முதல் ஜூலை வரை குறுந்தகடுகளுக்கான தொகை பெறப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட விவரத்தினை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையில் இவ் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் மற்றும் அனைத்து திருமணங்கள் பதிவு செய்யப்பட்டவைகளுக்காக பெறப்பட்ட குறுந்தகடுகளுக்கான கட்டணங்கள் யாவும் உரிய கணக்கு தலைப்புகளின் கீழ் விடுதல்கள் ஏதுமின்றி சான்று செய்யப்படுகிறது என்று அதில் குறிப்பிட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சிடி கட்டணமாக வசூல் செய்யப்படும் பணம் முறையாக அரசு கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறதா என்று ஏற்கனவே பொதுமக்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில் தற்போது பதிவுத்துறை தலைவர் அலுவலகமே விளக்கம் கேட்டு இருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Registration Department IG
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...