2015ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகும் பாடம் கற்காத அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு நிதி ஒதுக்குவது எப்போது? செப்டம்பரில் வேலை தொடங்குவதில்சிக்கல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகும் தமிழக அரசு சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு தற்போது வரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையையொட்டி ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரவும், ஆறு, ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு ெசய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், தூர்வாரும் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015ல் சென்னை மாநகரில் ஆறுகள், ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாற்று படுகைகளில் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்தனர். இதில், ஏராளமானோர் பலியானார்கள்.

Advertising
Advertising

அதன்பிறகு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முன்கூட்டியே முடிக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில்,  இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தமிழக பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கடந்த காலங்களை போல் அல்லாமல் பருவமழைக்கு முன்பே கால்வாய்களை தூர்வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாருவதற்காக  பொதுப்பணித்துறை சார்பில் 40 கோடி ஒதுக்கீடு செய்யக்கோரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் குறிப்பாக, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 11 பணிக்கு 2.30 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 11 பணிக்கு 2.38 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு 51 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 4 பணி என மொத்தம் 55 பணிக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், செப்டம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: