வெளிநாடு பயண திட்டம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28ம் தேதி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்கிறார். அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் செல்கிறார்கள். முதல்வர் வரும் 28ம் தேதி வெளிநாடு செல்லும் செப்டம்பர் 9ம் தேதி வரை தங்கி இருப்பார் தேவைப்பட்டால் வெளிநாட்டில் முதல்வர் கூடுதலாக சில நாட்கள் தங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வெளிநாடு செல்ல இருப்பதையொட்டி, இதற்கான முன்ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முன்னதாக, அதிகாரிகள் குழு ஒன்றும் வெளிநாடு செல்கிறது. முதல்வர் வெளிநாடு செல்வது குறித்தும், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் யாரை சந்தித்து தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேச இருப்பது குறித்தும் விவாதிக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தனது வெளிநாடு பயண திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனையின்போது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, அமெரிக்காவில் எந்தெந்த தொழில் நிறுவனங்களை முதல்வர் நேரில் சந்திக்க உள்ளார், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை நாட்கள் தங்கி இருப்பார் என்பது குறித்து திட்டமிடப்பட்டு விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. வழக்கமாக, மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும்போது பொறுப்பு முதல்வர் ஒருவரை அறிவித்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி பொறுப்பு முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: