கிருஷ்ண ஜெயந்தி: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  பகவான் கிருஷ்ணர் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வண்ணக் கோலங்களிட்டு, பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லங்களின் வழிநெடுக பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்களது இல்லங்களுக்கு வந்தருளியதாக பாவித்து போற்றி வணங்குவர். பகவான் கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ்ந்திட வேண்டும் என்று நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை வரிசையாக பதிய வைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதைத் தெரிவித்து, அனைவருக்கும் ``கிருஷ்ண ஜெயந்தி’’ திருநாள் நல்வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக பொது செயலாளர்): ‘குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல், தெளிந்த தண்ணீரைப் போல மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெற்று, மன நிம்மதியோடு வாழலாம்’ என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை எப்போதும் நினைவில் கொண்டு இலக்குகளில் வெற்றிகளைக் குவித்திடுவோம். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அறம் காத்து நின்று, அதர்மத்தை  வீழ்த்தி, தர்மத்தை நிலை நிறுத்திட கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

சரத்குமார் (சமக தலைவர்): கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாத அஷ்டமி நன்னாளில் கோகுலாஷ்டமி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நியாயம், தர்மம், நேர்மை இவற்றை கடைபிடித்து, மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வாங்கு வாழ வகைசெய்யும்  நன்னாளாக கிருஷ்ணஜெயந்தி திகழும் என்கின்ற வகையில், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இதேபோல வி.எம்.எஸ்.முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்), சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்களும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: