நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் கணவனை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது : நாலா சோபாராவில் பரபரப்பு

நாலா சோபாரா: வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி, கணவனை 11 முறை கத்தியால் வயிற்றில் குத்தியும் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தார். மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாலா சோபாரா கிழக்கில் உள்ள கலா நகரைச் சேர்ந்தவர் சுனில் கதம்(36). இவரது மனைவி பிரனாளி(33). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சுனில் கதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சுனில் கதம், பிரனாளி இருவரும் அந்தேரியில் உள்ள தனித்தனி நிறுவனங்களில் அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடீவ்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்தவர்கள். இந்த நிலையில், சுனில் கதமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பிரனாளி சந்தேகித்தார். இதனால், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவிலும் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Advertising
Advertising

இந்த சண்டைக்கு பிறகு சுனில் கதம் படுக்கையறையில் படுத்து தூங்கிவிட்டார். அப்போது தண்ணீர் குடிக்கும் சாக்கில் சமையலறைக்குச் சென்ற பிரனாளி அங்கிருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து, படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த சுனில் கதம் வயிற்றில் 11 முறை சரமாரியாக குத்தினார். அப்படியும் ஆத்திரமடங்காத பிரனாளி கத்தியால் சுனில் கதமின் கழுத்தை அறுத்தார். இதில், சுனில் கதம் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து

போனார். அதன் பிறகு வீட்டின் ஹாலுக்கு வந்த பிரனாளி அங்கு மனைவி மற்றும் பேத்திகளுடன் தூங்கி கொண்டிருந்த சுனில் கதமின் தந்தை ஆனந்தாவை(53) எழுப்பிய பிரனாளி, சுனில் கதம் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதனால், அதிர்ச்சியடந்த ஆனந்தா, இதுகுறித்து துலிஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சுனில் கதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து துலிஞ்ச் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பாட்டீல் கூறுகையில், ‘‘சுனில் கதம் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாகத்தான் பிரனாளி கூறினார். ஆனால், ஒருவர் தற்கொலை செய்வதாக இருந்தாலும் 11 முறை வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கவும், கழுத்தை அறுத்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. இதனால், பிரனாளி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரனாளியிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தனது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக பிரனாளி வாக்குமூலம் அளித்திருக்கிறார்’’ என்றார். உண்மையை ஒப்புக் கொண்ட பிரனாளியை போலீசார் கைது செய்தனர். நேற்று வசாய் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, பிரனாளியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: