×

ஜப்பான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சாம்பலுக்கு டிஎன்ஏ சோதனை : மோடிக்கு நேதாஜி மகள் வேண்டுகோள்

கொல்கத்தா:  ‘ஜப்பான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் சாம்பலை டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும்,’ என அவரது மகள் அனிதா போஸ், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர். இவர் கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி விமானத்தில் பயணம் செய்தபோது பர்மோசா தீவுக்கு அருகே விபத்து ஏற்பட்டு  இறந்து விட்டதாக ஜப்பான் அறிவித்தது. அவரது சாம்பல் ஜப்பானின் ரென்கோஜியில் உள்ள கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு
வருகின்றது. இந்நிலையில், நேதாஜியின் மரணம் குறித்த உண்மையை வெளிகொண்டு வருவதற்காக நேதாஜியின் சாம்பலை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மகளான அனிதா போஸ், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் அனிதா போஸ் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை நேதாஜி 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக நம்புகிறேன். ஆனால், பலர் இதை நம்பவில்லை. இதனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. ஜப்பானின் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள அவரது சாம்பலை டிஎன்ஏ பரிசோதனை செய்வதுதான் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை நீக்குவதற்கான சரியான வழியாக இருக்கும் கருதுகிறேன். டிஎன்ஏ சோதனை செய்தால், இறந்தது நேதாஜி தானா என்பது தெரிந்து விடும். எனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மங்களை அவிழ்ப்பதற்காக, அது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு பிரதமர் மோடி எடுத்த  நடவடிக்கைகளுக்காக அவரை சந்தித்து நன்றி ெதரிவிக்க விரும்புகிறேன். மேலும், பிரதமர் மோடியும், ஜப்பான் அதிகாரிகளும் ரென்கோஜி கோயிலில் உள்ள சாம்பலுக்கு டிஎன்ஏ சோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்கு முந்தைய அரசு நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய விரும்பவில்லை. நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் என கூறி, எனது கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DNA test , Netaji's ashes,Japanese temple
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...