இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய படக்குழு ராணுவத்தின் உதவியால் உயிர் பிழைத்தோம் : நடிகை மஞ்சுவாரியர் பேட்டி

திருவனந்தபுரம்: ராணுவத்தின்  உதவியால் தான் உயிர் பிழைக்க முடிந்தது என இமாச்சலில் நிலச்சரிவு  மற்றும் பனிப்பொழிவில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை மஞ்சுவாரியர்  தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் சனல்குமார்   சசிதரன்.  தற்போது ‘கயற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக  நடிகை மஞ்சு வாரியர் உள்பட  படக்குழுவை சேர்ந்த 30  பேர்  இமாச்சல பிரதேசம்  சத்ரு என்ற இடத்துக்கு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு  மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் படக்குழு அங்கு  சிக்கிக்கொண்டது. இதையடுத்து மணாலியில்   இருந்து  மீட்புப்படையினர்  அனைவரையும்   மீட்டனர். நேற்று முன்தினம் மாலை மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் சத்ரு பகுதியில் இருந்து வாகனங்களில் மணாலிக்கு புறப்பட்டனர். இதுகுறித்து நடிகை மஞ்சுவாரியர்  கூறியதாவது: கயற்றம் என்ற படத்துக்காக நாங்கள் 3 வாரத்துக்கு முன்பு  இமாச்சலின் மணாலிக்கு வந்தோம். இங்கிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள சத்ரு என்ற இடத்துக்கு சென்றோம். அங்கிருந்து 7 கிலோ மீட்டர் நடந்து  சென்று ஷியாம்கோரு என்ற இடத்துக்கு வந்தோம். அங்கு மிகவும் சிரமப்பட்டு  தான் சென்றோம்.

எங்கள் யாருக்கும் மலையேற தெரியாது என்பதால்  உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த பகுதிக்கு சென்றோம். நாங்கள் செல்லும்போது  அங்கு நல்ல கால நிலை இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கால நிலை மாறலாம்.  நிலச்சரிவு, பனிப்பொழிவு திடீரென ஏற்படும் என்று உள்ளூர்வாசிகள் எங்களை  எச்சரித்தனர். அவர்கள் கூறியதுபோல நடந்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு  முன் திடீரென காலநிலை மாறியது. மழை பெய்ததால் பல  பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. பனிப்பொழிவும் அதிகரித்தது. ஷியாம்கோரு  பள்ளத்தாக்கான பகுதியாகும். அங்கு குடில் கட்டி தான் அனைவரும் தங்கி  இருந்தோம். அங்கு இருப்பது ஆபத்து என உள்ளூர்வாசிகள் கூறியதால் நாங்கள்  மீண்டும் சத்ருவுக்கு நடந்து ெசன்றோம். செல்லும் போதே தூரத்தில் நிலம் சரிந்து  விழுந்ததை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். மேலும் 3 அடி  உயரத்துக்கு பனிப்பொழிவும் இருந்தது. மிகவும் சிரமப்பட்டு நாங்கள்  சத்ருவுக்கு வந்தடைந்தோம். அந்த  பகுதியில் மின்வசதி இல்லை. ராணுவம் வந்திருக்காவிட்டால் நாங்கள் தப்பி வந்திருக்க முடியாது என்றார்.

Related Stories: