இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு

கொழும்பு: இலங்கை- நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டதால் 36.3 ஓவர் மட்டுமே வீசப்பட்டன. கொழும்புவில் பெய்த மழை காரணமாக  இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் திட்டமிட்டபடி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கவில்லை. மழை நின்றாலும் மைதானத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்ததால் ஆட்டம் தொடங்கவில்லை. இந்நிலையில் நேற்று பகல் ஒரு மணிக்கு பிறகு வானம் வெளுக்க தொடங்கியதால் டாஸ் போடப்பட்டது. அதில் வென்ற இலங்கை அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. சர்ச்சைக்குரியவகையில் பந்து வீசிய குற்றசாட்டில் சிக்கியுள்ள அகிலா தனஞ்ஜெயா நேற்றைய போட்டியில் இடம் பெறவில்லை. ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட நியூசி. கேப்டசன் கேன் வில்லியம்சன் நேற்று களமிறங்கினார்.

தொடக்க வீரர்களாக  கேப்டன் கருணரத்னே,  திரிமனே ஆகியோர் களமிறங்கினர். வில்லியம் தனது பந்துவீச்சில்  திரிமனேவை வெளியேற்றினார். அவர்  35 பந்துகளில் 2ரன் எடுத்திருந்தார். அடுத்து வந்த குசால் மெண்டீஸ் நிதானமாக ஆடி 32 ரன் சேர்ந்திருந்தார். அப்போது கொலின் டீ கிராண்டுஹோம்  அவரை ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில் மீண்டும் மாலையில் மழை மேகங்கள் சூழ ஆரம்பித்தன. அதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது இலங்கை 36.3 ஓவருக்கு  2விக்கெட்களை இழந்து 85 ரன் எடுத்திருந்தது. கருணரத்னே 49 ரன்களுடனும், ஏஞ்சலோ மாத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஏற்கனவே 29வது ஓவர் வீசப்பட்ட நிலையிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நேற்று குறைந்த ஓவர்கள் வீசப்பட்டாலும் அதை நியூசிலாந்து தரப்பில் 5 வீரர்கள் பந்து வீசினர். பலர் குறைந்த ரன்னே விட்டு தந்தனர்.

Related Stories: