புரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி

சென்னை: புரோ கபடி தொடரின் இந்த சீசனில்  உள்ளூரில் நடைபெறும போட்டிகளில் உள்ளூர் அணிகள் தோல்வி பெறுவது தொடர் கதையாக உள்ளது. அந்த உதாரணத்திற்கு  தமிழ் தலைவாஸ் அணியும் தப்பவில்லை. எனவே எஞ்சியுள்ள ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற நிலைமையில் அந்த அணி உள்ளது. புரோ கபடி  தொடரின் இந்த சீசன் ஜூலை 20ம் தேதி ஐதராபத்தில் தொடங்கியது. வழக்கமாக  வௌியூர் களங்களில் தடுமாறும் புரோ கபடி அணிகள், உள்ளூரில் அசத்தலாக விளையாடும். ஆனால் இந்த சீசனில் அதெல்லாம்  பழங்கதையாகி விட்டது.

ஐதரபாத்தில் நடந்த போட்டிகளில் உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில்  ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. போன சீசனில் தான் மோதிய 6 போட்டிகளில் 3-3 என்று தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் பாட்னா களத்தில் உள்ளூர் அணியான பாட்னா பைரேட்ஸ் அணி 1-3 என்று கணக்கில்தான் வெற்றியை சுவைத்தது. அதாவது தான் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது பாட்னா. ஆனால் கடந்த சீசனில் 6 போட்டிகளில் 4-2 என்று வெற்றிப் பெற்றிருந்தது.

தமிழ்தலைவாஸ் போல் கடந்த 3 ஆண்டுகளாக விளையாடி வரும் அணி குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ். அந்த அணி உள்ளூர் போட்டிகளில் எப்போதும் கலக்கும். போன சீசனில் தான் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ‘டை’ என அசத்தியிருந்தது. ஆனால் இந்த சீசனில் தான் விளையடிய 4 போட்டிகளிலும் குஜராத் தோற்றுவிட்டது. அதிரடி அணிகளில் ஒன்றாக யு மும்பா இந்த முறை தட்டுதடுமாறிதான் உள்ளூர் போட்டியை முடித்திருக்கிறது.  மும்பை களத்தில் போன சீசனில் 3-3  என வெற்றிப் பெற்ற உள்ளூர் அணியான யு மும்பா இந்த முறையும 2-2 என்ற கணக்கில் போராடி வென்றுள்ளது. ஆனால் இந்த முறை தோற்ற அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும் வகையில்  குறைந்த புள்ளி வித்தியாத்தில்தான் வெற்றி பெற்றது. இப்போது சென்னை களத்தில் உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ் அணியும் முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கியது. ஆனால் போன சீசனில் வெற்றியுடன் தொடங்கியது.

உள்ளூர் வீரர் வி.அஜித்குமார் அதிரடியால் 2வது போட்டியை ‘டை’ செய்தது.  ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் மோதிய போட்டியிலும் 2 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தோற்றது. இத்தனைக்கும் ஆட்டம் முழுவதும் தமிழ் தலைவாஸ் கையில் இருந்தது. அந்த அணியின் வீரர்கள் அனைவரும் பெரும்பாலும் களத்தில் இருந்தனர. ஆட்டமிழந்த போதும் அதிக நேரம் வெளியில் உட்காரவில்லை. ஆனால் ஜெய்பூர்  2, 3 வீரர்களுடன்  தமிழ் தலைவாஸ் வீரர்களை அடிக்கடி ‘சூப்பர் டேக்கிள்’ முறையில்  மடக்கி 2, 2 புள்ளிகளாக சேர்த்தனர். ஜெய்பூரை 2வது பாதியில் ஆட்டமிழக்க செய்தும் பலனில்லாமல போனது. இன்னும் எஞ்சியுள்ள ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ்   இன்று யு மும்பா அணியுடனும் மோத உள்ளது.  இந்தப் போட்டியில் வென்றால் தமிழ் தலைவாஸ் அணிக்கு அது ஆறுதல் வெற்றியாக இருக்கும். முடிவு எப்படி இருந்தாலும்  இந்த சீசனில் உள்ளூர் அணிகள் சொந்தக் களத்தில் ஜொலிக்காத வரலாறு தொடர்கிறது.

Related Stories: