செப்.7ல் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சென்னை: வரும் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும். இது உலகில் முக்கிய நிகழ்வாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.  இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் இருந்து நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சந்திரயான்-2 நிலவை சுற்றி, நீள்வட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது, வரும் செப். 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு தரை இறங்கும் முயற்சியை தொடங்கும். அதிகாலை 1.55 மணிக்குள் தரை இறங்கிவிடும். இது, உலகத்தில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தரை இறங்கும்போது, அதன் வேகத்தை குறைத்து கட்டுப்படுத்த வேண்டும். இது, பெரும் சவாலான பணி. தரை இறங்கும்போது, ஒரு வினாடிக்கு 1.6 கிமீ வேகத்தில் போய்க் கொண்டிருக்கும். இந்த வேகத்தை, படிப்படியாக குறைத்து ஜீரோ கி.மீட்டருக்கு கொண்டு வர வேண்டும். இந்த சவாலான பணியை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. யார் திறமையானவர்களோ, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சந்திரயான்-2 உருவாக்கியதில் 2 பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் எதிர்காலத்தில் செயல்பட உள்ள திட்டங்களில் பெண்களே தலைமை ஏற்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. சந்திரயான்-2க்கு பின்பு மேலும் பல திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்த உள்ளோம். சந்திரயான்-3 அனுப்பும் திட்டமும் உள்ளது. சந்திரயான்-2 வெற்றியின் மூலம் மற்ற நாடுகளைவிட முன்னோக்கி செல்ல முடியும் என்பதை நாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நம்முடைய குறிக்கோள், வெற்றி பெறுவதுதான். அதுதான் நமது இலக்கு. இதில் மற்ற நாடுகளை ஒப்பிட்டு கொண்டிருக்க முடியாது. சந்திரயான்-2 தரை இறங்கும் முக்கியமான நிகழ்வை பார்வையிட இஸ்ரோவுக்கு பிரதமர் மோடியை அழைத்திருக்கிறோம். அவர் வருவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: