×

வேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டத்தை தமிழக அரசு தயாரித்து செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் தலைசிறந்த வேளாண் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 33வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2017ம் ஆண்டில் ஏழாவது இடத்தில் இருந்த இந்த பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் 33வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. கோவை வேளாண் பல்கலை.யில் இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் போன்ற பதவிகளுக்கு வெளியாட்கள் எவரும்  விண்ணப்பிக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் பதவி உயர்வின் அடிப்படையிலும், சிறப்பு ஆள்தேர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழகத்திலேயே சிறந்து விளங்கும் வல்லுனர்கள் பலரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சேவை செய்ய தயாராக உள்ளனர். ஆனால், உதவிப் பேராசிரியர் தவிர பிற உயர்பதவிகளுக்கு வெளியாட்களை நியமிப்பதில்லை என்ற பொருந்தாத விதியால் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரமும், தரவரிசையும் சீரழிந்து கொண்டே செல்கிறது.  இந்த நிலையை மாற்றி தகுதியும், திறமையும் உள்ள எவர் வேண்டுமானாலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எந்த பதவியிலும் சேரலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும். கோவையில் உள்ள பல்கலைக்கழகம் தவிர தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய  வேளாண்மை பல்கலைக்கழகங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு வேளாண் கல்லூரிகள் ஒன்று கூட இல்லை. இரு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக தொடங்க வேண்டும். தமிழகத்தின் வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் இந்த கோரிக்கைகளை சிறப்புத் திட்டமாக தயாரித்து விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Agricultural Education, Government of Tamil Nadu, Ramadas
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்