×

ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் கிடையாது : மத்திய நிதியமைச்சர் விளக்கம்

மைசூரு: ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது  செய்துள்ளதின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என்று மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐஎன்எக்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அரசியல்  பழி வாங்கும் நடவடிக்கை எதுவுமில்லை. புகார் வரும் பட்சத்தில் வருமான  வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி சுதந்திரத்துடன்  இயங்கிவரும் விசாரணை அமைப்புகள் சம்மந்தப்பட்டவரை கைது செய்து விசாரணை  நடத்துவது புதியதல்ல. நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் உள்ளதாக கூறிக்  கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இது தெரியாதா அல்லது தெரிந்தும்  தெரியாதாதது போல் உள்ளார்களா?

அரசியல் கட்சி நடத்துவோருக்கு  நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். பெரிய அரசியல் கட்சியான  காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம் கைது விஷயத்தில் மத்திய அரசின் மீது வீண்பழி  சுமத்துவது சரியல்ல. சிதம்பரம் கைது விஷயத்தில் பாஜ அரசு பழிவாங்கும்  அரசியல் செய்வதாக கூறுவதை பார்க்கும்போது, காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது  சிபிஐ, இடி, ஐடி துறைகளை தவறாகத்தான் பயன்படுத்தினார்களோ என்ற சந்தேகம்  எழுகிறது. நாங்கள் தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கும் அமைப்புகளின்  செயல்பாட்டில் தலையிடுவதில்லை. மத்திய அரசு மீது பழி சுமத்தும் முயற்சியை  காங்கிரஸ் தலைவர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : P Chidambaram's arrest , no political motive,Union finance minister's explanation
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...