×

சிபிஐ, அமலாக்கத்துறையை பழி வாங்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி : ‘தனிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்ைகக்காக சிபிஐ,  அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது,’ என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்று முன்தினம் கைது செய்தது. அன்று இரவு முழுவதும் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘இது பட்டப்பகலில் நடந்த ஜனநாயக படுகொலை,’ என குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 2 நாட்களாக ஜனநாயகத்தை அரசே பட்டப்பகலில் படுகொலை செய்வதை நாடே பார்த்தது. சட்டத்தை மத்திய அரசு தனக்கு சாதகமாக வளைத்துள்ளது. இதற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையை தனிப்பட்ட பழிவாங்கும் அமைப்பாக பயன்படுத்தி உள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும், வேலையிழப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அனைத்து துறைகள் நசிவால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதை திசை திருப்பும் வகையில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக வீண் விசாரணை நடத்திவரும் நிலையில், ப.சிதம்பரத்தின் மீது எந்த குற்றம்சாட்டும் இல்லை என தெரிய வந்துள்ளது. சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆளும் பாஜ அரசில், சட்டம் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள், கைது செய்யப்படாத நிலையில், ப.சிதம்பரம் மட்டும் எந்த சட்ட அடிப்படையும்் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீது குற்றம் கூட சாட்டப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தவிர, அவரது கைதுக்கு வேறு எதுவும் காரணம் இல்லை. இந்திராணி முகர்ஜி என்ற பெண் குற்றம்சாட்டினார் என்பதற்காகவே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Central government, CBI ,enforcement action,Congress charges
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்