ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிதம்பரத்துக்கு வைத்த குறியல்ல காங்கிரசுக்கு வைக்கப்பட்ட குறி : கார்த்தி சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி : ‘‘கைது நடவடிக்கை எனது தந்தையை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. காங்கிரஸ் கட்சியை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது,’’ என்று ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாடடி உள்ளார். மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா தடையில்லா சான்றிதழை பெற்றுத்தருவதற்காக கடந்த 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான புகாரில் சிபிஐ நேற்று முன்தினம் அவரை கைது செய்தது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்பி நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கைது நடவடிக்கை எனது தந்தையை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. காங்கிரஸ் கட்சியை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. நான் தற்போது ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். எனது தந்தை சிபிஐ முன் ஆஜராக வேண்டிய சட்டரீதியான தேவை எதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் எனது தந்தை தலைமறைவாகவும் இருக்கவில்லை. எனது தந்தை மீது சிபிஐ வழக்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி மத்திய அரசை எதிர்த்து தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். அதற்காக தான் எனது தந்தை மீது மத்திய அரசு கைது நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்பு யாருக்கும் சிபிஐ 2 மணி நேர சம்மனை அனுப்பியதில்லை. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனது வீட்டில் 4 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு யார் வீட்டிலும் இத்தனை முறை சோதனை நடத்தப்பட்டதில்லை. ஆனாலும், அவர்களால் எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘இந்திராணி முகர்ஜியை சந்தித்ததே இல்லை’

பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பு குறித்து கார்த்தியிடம் கேட்டபோது, `‘நான் ஒருபோதும் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியை சந்தித்ததில்லை. பைகுல்லா சிறையில் சிபிஐ விசாரணை நடத்தியபோது தான் இந்திராணி முகர்ஜியை நான் பார்த்தேன். அந்திய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துடன் தொடர்பு உடையவர்களை நான் சந்தித்ததே இல்லை,’’ என பதிலளித்தார்.

Related Stories: