அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியாளர்கள் போராட்டம் எதிரொலி கர்நாடக முதல்வர் டெல்லி பயணம் : அமித்ஷாவுடன் ஆலோசிக்க முடிவு

பெங்களூரு : அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், கர்நாடகாவில் பல எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது முதல்வர் எடியூரப்பாகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளதால், டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு அமித்ஷாவுடன் ஆலோசிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் நீண்ட இழுபறிக்கு பிறகு மாநில அமைச்சரவை விரிவாக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. முன்னாள் அமைச்சர்களுடன் புதிதாக மூன்று எம்எல்ஏக்களுக்கு இதில் இடம் கிடைத்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ லட்சுமண் சவதிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் வெளிப்படையாகவே எதிர்ப்பு கிளம்பியது. பாஜ மூத்த எம்எல்ஏக்கள் உமேஷ் கத்தி, திப்பாரெட்டி, ரேணுகாச்சார்யா உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்தனர். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதால் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்ரதுர்காவில் ரோட்டில் டயர்கள் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். கடந்த ஆட்சியின்போது அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியாளர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

அதுபோல் இப்போது நடந்து விடக்கூடாது என்பதால் முதல்வர் எடியூரப்பா டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களை சந்திப்பதற்கு முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு 7 மணி அளவில் முதல்வர் எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பாஜ தலைவர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமையும் வரையில் காங்கிரஸ்-மஜத அதிருப்தியாளர்களிடம் வலிந்து பேசிய முதல்வர் எடியூரப்பா, இப்போது தங்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் அனைவரும் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்காகவே முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்கள் என்ன செய்தாலும் கண்டுக்கொள்ள வேண்டாம் என்று பாஜ தலைவர் அமித்ஷா, முதல்வர் எடியூரப்பாவிடம் கூறியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், அமைச்சரவையில் தங்கள் சாதியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்கக்கோரி பெங்களூருவில் எடியூரப்பா வீட்டு முன் போவி சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதேபோல் மற்ற சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: