கோவையில் அட்டகாச யானைக்கு ‘மரணம்’ என பெயர் வைத்த மக்கள்

பெ.நா.பாளையம்: கோவை அருகே இரண்டு பேரை கொன்ற காட்டு யானைக்கு கிராம மக்கள் ‘மரணம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.  கோவை துடியலுர் அருகே உள்ள பன்னிமடை பகுதிகளில் ஆண் யானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த யானை இப்பகுதியில் சமீபகாலமாக இரண்டு பேரை தாக்கி கொன்றுள்ளது. மேலும், மூர்க்கத்தனமும், ஆக்ரோஷமுடனும், பெரிய கொம்புகளுடனும் மிரட்டலாக சுற்றி வரும் இந்த யானையை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். பகல் முடிந்து இருள் சூழ ஆரம்பித்ததுமே இந்த யானை வனத்தின் எந்த பகுதியிலிருந்து, எப்படி வெளியே வருகிறது? என்பதே புரியாமல் அச்சமாக இருப்பதாக பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த யானை கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வனத்திற்குள் நிரந்தரமாக விரட்டவும் சாடிவயல் முகாமில் இருந்து கும்கி யானையை உடனடியாக வரவழைக்க வேண்டுமென்று வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

வழக்கமாக இந்த பகுதியில் சுற்றி வரும் யானைகளுக்கு பெயர் வைத்துவிடும் அப்பகுதி மக்கள், இரண்டு பேரை கொன்ற இந்த யானைக்கு ‘மரணம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த யானை ஒரு வீட்டின் கேட்டை காலால் உதைத்து தந்தத்தால் திறந்தபடி உள்ளே நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இப்போது அந்த காட்சியின் பின்புலத்தில் ‘பேட்ட’ படத்தின் ‘மரணம் மாஸ்சு மரணம்’ பாடலையும் இணைத்து சமூக வலைதளங்களில் அப்பகுதி இளைஞர்கள் வைரலாக்கியுள்ளனர். ஏற்கனவே தடாகம் பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த இரண்டு காட்டு யானைகளுக்கு சின்னதம்பி, விநாயகன் என்று இவர்கள் பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே இரவு நேரங்களில் வனத்தை ஒட்டி வசிக்கும் மக்கள் தேவையில்லாமல் வீடுகள் இல்லாத தனிமை இடங்களில் உட்கார்ந்து மது அருந்தவோ, பேசிக் கொண்டோ இருக்க வேண்டாம் என  வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: