உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிவகாசியில் பசுமை பட்டாசு மூலப்பொருள் ஆராய்ச்சி மையம் திறப்பு : ஆலை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை

சிவகாசி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிவகாசியில் பசுமை பட்டாசு மூலப்பொருள் ஆராய்ச்சி மையம் நேற்று திறக்கப்பட்டது. பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (நீரி), பசுமை பட்டாசுக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தது.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பசுமை பட்டாசு மூலப்பொருள் ஆராய்ச்சி மையம் நேற்று திறக்கப்பட்டது. இதை தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய இயக்குனர் ராகேஷ்குமார் திறந்து வைத்தார். தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப கழக மூத்த விஞ்ஞானி சாந்தனா ராயலு முன்னிலை வகித்தார். டான்பாமா சங்க தலைவர் கணேசன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மாணவர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விஞ்ஞானி சாந்தனா ராயலு கூறுகையில், ‘‘தற்போது பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பார்முலா மூலம் பட்டாசு உற்பத்தி செய்தால் 30 சதவீதம் புகை குறையும். சிவகாசியில்  துவங்கப்பட்டுள்ள பசுமை பட்டாசு மூலப்பொருள் ஆராய்ச்சி மையத்தில் 4 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் பின்னர் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு  பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த சோதனை மையம் மூலம் உரிமம் பெறப்பட்டு பட்டாசு தயாரித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இங்கு உரிமம் பெற்று பசுமை பட்டாசு தயாரிக்க முடியும். தற்போது இங்கு சோதனை நடத்தப்பட்டு நாக்பூரில் உள்ள அலுவலகம் மூலம் உரிமம் தரப்படும். ஒரு சில மாதங்களில் சிவகாசியிலேயே பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

300 ஆண்டுகள் பிரச்னை இல்லை

பின்னர் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டான்பாமா தலைவர் கணேசன் பேசுகையில், ‘‘தற்போது பசுமை பட்டாசுக்கான புதிய மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இனி பட்டாசு தொழிலுக்கு 300 ஆண்டுகளுக்கு  எந்த பிரச்னையும் ஏற்படாது. இதன் மூலம் இத்தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: