பொருளாதார மந்த நிலை ஏன்? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்

மும்பை: பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கை கூட்டத்தில் (எம்பிசி) ரிப்போ வட்டியைக் குறைக்க முடிவு செய்து 35 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைத்தது. அப்படி இருந்தும் பொருளாதார மந்த நிலையில் முன்னேற்றம் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் கூறியுள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டியே ரிப்போ வட்டி. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகள் தங்களது நிதி செலவீனத்தை குறைக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி உணர்த்தியது. கடந்த 7ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 4 பேர், ரிப்போ வட்டியை 35 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைக்க ஆதரவு தெரிவித்தனர். ரிசர்வ் வங்கியின் பெரும்பாலான உறுப்பினர்களே ரிப்போ வட்டி விகிதத்தை அதிக அளவில் குறைக்க ஆதரவு அளித்துள்ளனர். இது அசாதாரண சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த மே - ஜூன் மாதங்களில் சேவைகள் துறைகளின் செயல்பாடுகள் மந்தமாக காணப்பட்டது. கிராமப்புறங்களில் தேவை அதிகம் உள்ள டிராக்டர், மோட்டார் சைக்கிள் விற்பனை மந்தமாக இருந்தது. அதேபோல், நகர்புறங்களில் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குறைவாகவே இருந்தது. அதேவேளையில், மூன்று மாதங்களுக்கு முந்தை முன்பதிவுக்கு சலுகை அளித்ததன் மூலம் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. கட்டுமானத் துறையில் சிமிண்ட் உற்பத்தி, இரும்பு கம்பிகள் (ஸ்டீல்) வாங்குவது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குறைவாகவே இருநத்து. கட்டுமான துறையில் போதிய அளவுக்கு பணிகள் நடைபெறவில்லை. பொருளாதார மந்த நிலைக்கு இதுபோன்ற பல காரணங்கள் உள்ளன என்று சக்திகந்த தாஸ் கூறினார். ரிப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் போதாதது என்ற நிலையே நீடிக்கிறது.

ரிப்போ வட்டியுடன் இணைத்து மாறும் வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்களின் கடன்கள், டிபாசிட்களுக்கு மற்ற வங்கிகளும் அமல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் சக்திகந்த தாஸ் கூறினார். பணவீக்கம் முக்கிய காரணியாக உள்ளது. இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி ஆக்கப்பூர்வமாக செயல்படும். தேவைப்பட்டால் மேலும் ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். மேலும் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்தால், கடந்த பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து இதுவரையில் 100 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் இந்த அளவுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: