குடிமராமத்து பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகளுக்கு டோஸ் ‘சத்துணவு வேலைக்குப் போங்க... அங்கதான் சும்மா இருக்கமுடியும்’: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து, பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் துவங்கி 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 40 முதல் 50 சதவீத பணிகள் முடிந்திருக்க வேண்டிய நிலையில், 10 சதவீத பணிகள் மட்டும் நடந்திருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சில கண்மாய்களில் பணி துவங்கவே இல்லை. மழை வருவதற்கு முன்பாக மராமத்து பணிகளை முடிக்க வேண்டும். விவசாயிகள் பங்களிப்புடன் முடிக்க வேண்டும். பணிகள் துவங்கி 2 மாதங்களில் 10 சதவீதம் என்றால் 5 மாதம் ஆனாலும் வேலை நடக்காது. வேலையை எடுத்து செய்யும் நபர்கள் சரியில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். வரும் 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். ரோலர் இல்லை.

ஜேசிபி கிடைக்கவில்லை என்ற காரணங்கள் கூறக்கூடாது. மாவட்டத்தில் 560 ஜேசிபிகள் இருக்கின்றன. வேலையை சரியாக செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லை லீவு போட்டு செல்லுங்கள். வேலை செய்யாத நபர்களை மாற்றுங்கள். மீட்டிங்கிற்கு வராத அதிகாரிகளுக்கு, வேலை செய்யாத அனைவருக்கும் மெமோ கொடுங்கள். சனிக்கிழமைக்குள் 50 சதவீத வேலைகளை முடித்தாக வேண்டும். இப்படி இருந்தால் சத்துணவு வேலைக்கு தான் போக வேண்டும். அங்கு சென்றால்தான் சும்மா இருக்க முடியும். கண்மாய் பணிகளில் இடைஞ்சல் செய்வோர் மீது போலீசில் புகார் செய்யுங்கள். கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: