பணமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராஜ் தாக்கரே

* மும்பையில் 4 இடங்களில் 144 தடை உத்தரவு

* முன்னெச்சரிக்கையாக முக்கிய தலைவர்கள் கைது

மும்பை: மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க மும்பை நகரிலும், அமலாக்கப்பிரிவு அலுவலக வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், எம்.என்.எஸ். கட்சியைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மகாாரஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷி கோகினூர் சி.டி.என்.எல். என்ற கட்டுமான நிறுவத்தை நடத்தி வருகிறார். இதில் ராஜ் தாக்கரே பங்குதாரராக இருந்தபோது ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனம் 450 கோடிக்கு கடன் மற்றும் பங்கு முதலீடு செய்திருந்தது. இதில் பணமோசடி நடந்ததாக அமலாக்கத்துறை உன்மேஷ் ஜோஷிக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். மூன்று நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல ராஜ் தாக்கரேக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே, “அமலாக்கத்துறை சம்மனை ஏற்று ராஜ் தாக்கரே ஆஜராவார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜ் தாக்கரே நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தென் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். ராஜ் தாக்கரே மட்டும் அமலாக்கத்துறை அலுவகத்துக்குள் சென்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா, மகன் அமித் மற்றும் மருமகள் மித்தாலி ஆகியோர் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர்.

ராஜ்தாக்கரே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதையொட்டி அந்த அலுவலகத்துக்கு வெளியேயும் மற்றும் ராஜ் தாக்கரே வசித்து வரும் தாதர், சில பகுதிகள் மற்றும் மத்திய மும்பையின் சில பகுதிகள் மற்றும் தென் மும்பையில் அமலாக்கப்பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பல்லார்டு பியர் ஆகிய இடங்களில் மும்பை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கருதியே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே கூட வேண்டாம் என்று ராஜ் தாக்கரே தனது கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரி ெதரிவித்தார்.

இதற்கிடையே, எம்.என்.எஸ். கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டேயை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சமயத்தில் அவர் “இடியட் ஹிட்லர்” என்று எழுதப்பட்டிருந்த டீ ஷர்ட் அணிந்து இருந்தார். அதில் நாஜிக்களின் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருந்தது. மும்பை மற்றும் தானேயை ேசர்ந்த எம்.என்.எஸ். தலைவர்கள் சந்தோஷ் தூரி மற்றும் ராஜன் மோரே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்றுக் காலை 11.30 மணிக்கு ஆஜரான ராஜ் தாக்கரேயிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.

Related Stories: