ஆந்திராவில் ஐஜி வாகனம் போன்று ஸ்டிக்கர் ஒட்டி காரில் கடத்திய 1.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: துப்பாக்கியுடன் 13 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் ஐஜி வாகனம் போன்று ஸ்டிக்கர் ஒட்டி காரில் கடத்திய 1.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக துப்பாக்கியுடன் 13 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் ஒரு கும்பல் வந்து, 15 லட்சம் தந்தால் 1 கோடி பழைய நோட்டுகளை கொடுப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த வியாபாரி அதற்கு மறுப்பு தெரிவித்தாராம். மேலும் அந்த வியாபாரி விசாகப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விசாகப்பட்டினம் அகனம்புடி   சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ‘ஐஜி பயன்படுத்தும் வாகனம் போல் ‘2 நட்சத்திரங்கள்’ கொண்ட ஸ்டிக்கர் மற்றும் முத்திரையுடன் வந்த காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Advertising
Advertising

அதில், 1.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், ஒரு வாக்கி டாக்கி, 1 துப்பாக்கி, 6 டம்மி தோட்டாக்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த 13 பேரையும் கைது செய்தனர். ஆனால், கைதானவர்கள் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் காவல்துறை ஆணையர் மீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுமாறும், அதற்கு மறுத்தால் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவதாகவும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வியாபாரிக்கு வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அகனம்புடி சோதனைசாவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட நபர்களிடம் விசாரணை செய்தபோதும், அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த போதும், அவர்கள் தான் வியாபாரியை மிரட்டிய கும்பல் என தெரிந்தது. இதையடுத்து 13 பேர் கொண்ட அந்த கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், காரில் பறிமுதல் செய்த பழைய ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து எங்கு கொண்டு வரப்பட்டது. எங்கு கொண்டு செல்கின்றனர் என்று விசாரணை நடக்கிறது’ என்றார்.

Related Stories: