×

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கி மீண்டது எப்படி? நடிகை மஞ்சுவாரியார் பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: பிரபல மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன். தற்போது ‘கயற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவை சேர்ந்த 30 பேர் இமாச்சல பிரதேசம் சத்ரு என்ற இடத்துக்கு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் படக்குழு அங்கு சிக்கிக்கொண்டது. மணாலியில் இருந்து மீட்புப்படையினர் சத்ரு பகுதிக்கு விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சென்றனர். மேலும் சாலைகளும் சீரமைக்கப்பட்டன. முதலில் சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

நேற்று மாலை மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் சத்ரு பகுதியில் இருந்து வாகனங்களில் மணாலிக்கு புறப்பட்டனர். இந்த தகவலை டைரக்டர் சனல்குமார் சசிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ெதரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து நடிகை மஞ்சுவாரியார் அளித்த பேட்டி: கயற்றம் என்ற படத்துக்காக நாங்கள் 3 வாரத்துக்கு முன்பு இமாச்சலபிரதேசம் மணாலிக்கு வந்தோம். இங்கிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்துக்கு சென்றோம். அங்கிருந்து 7 கிலோ மீட்டர் நடந்து சென்று ஷியாம்கோரு என்ற இடத்துக்கு வந்தோம். அங்கு மிகவும் சிரமப்பட்டு தான் சென்றோம்.

எங்கள் யாருக்கும் மலையேற தெரியாது என்பதால் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்த பகுதிக்கு சென்றோம். நாங்கள் செல்லும்போது அங்கு நல்ல கால நிலை இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கால நிலை மாறலாம். நிச்சரிவு, பனிப்பொழிவு திடீரென ஏற்படும் என்று உள்ளூர் வாசிகள் எங்களை எச்சரித்தனர். அவர்கள் கூறியது போல நடந்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென காலநிலை மாறியது. அதைத்தொடர்ந்து மழை பெய்ததால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. பனிப்பொழிவும் அதிகரித்தது. ஷியாம்கோரு பள்ளத்தாக்கான பகுதியாகும். அங்கு குடில் கட்டி தான் அனைவரும் தங்கி இருந்தோம்.

அங்கு இருப்பது ஆபத்து என உள்ளூர்வாசிகள் கூறியதால் நாங்கள் மீண்டும் சத்ருவுக்கு நடந்து ெசன்றோம். செல்லும் போதே தூரத்தில் மலைகள் இடிந்து விழுந்ததை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். மேலும் 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவும் இருந்தது. மிகவும் சிரமப்பட்டு நாங்கள் சத்ருவுக்கு வந்தடைந்தோம். அங்கு சிலர் தங்குவதற்கு கட்டிடம் கிடைத்தது. எங்களுடன் வந்த சில சுற்றுலா பயணிகளும், ஏற்கனவே அங்கு இருந்தனர். அந்த பகுதியில் மின்வசதி இல்லை.

நாங்கள் உள்பட ஏராளமானோர் அங்கு சிக்கியதை அறிந்த ராணுவத்தினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக பெண்களுக்கு மட்டும் ராணுவத்தினர் சேட்டிலைட் ேபான் கொடுத்தனர். அந்த போனில் எனது அண்ணன் மதுவாரியருக்கு தகவல் தெரிவித்தேன். கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளிதரன் நடவடிக்கையால் எங்களால் தப்பிக்க முடிந்தது. இந்த சம்பவம் என் கனவில் நடந்ததுபோல் உள்ளது. ராணுவத்தின் உதவியால் தான் உயிர் பிழைக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Himachal landslide, actress mancuvariyar
× RELATED கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு...