நாமக்கல்லில் நோய் வாய்ப்பட்ட தந்தையை கவனிக்க முடியாததால் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மகன் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் நோய் வாய்ப்பட்ட தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரை கிணறு பகுதியை சேர்ந்தவர் தனபால் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கனகாம்பாள் என்கின்ற மனைவியும், வெங்கடேசன் என்ற மகனும், செல்வி மற்றும் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். முதுமை மற்றும் நோய் காரணமாக இரண்டு மாதங்களாக படுக்கையிலேயே இருந்த வந்த தனபால் கடந்த 6ம் தேதி திடீரென இறந்துவிட்டார். இதனை அடுத்து தனபாலின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனபாலின் மகள் செல்வி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertising
Advertising

இந்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், ராசிபுரம் வட்டாட்சியர் முன்னிலையில் தனபாலின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போது தனபாலின் மகன் வெங்கடேசனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து தந்தையை கொலை செய்ததை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். தனபால் நோய் வாய்ப்பட்டு கடந்த 2 மாதங்களாக படுக்கையிலேயே இருந்ததால் அவரை கவனித்து கொள்வதில் வெங்கடேசனுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தந்தையை கொலை செய்ய திட்டமிட்ட வெங்கடேசன், தனது தங்கை செல்வியின் கணவன் நடராஜனோடு சேர்ந்து தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த நடராஜனை போலீசார் தேடி வருகின்றனர். நோய் வாய்ப்பட்ட தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: