எல்லோருக்கும் அடிக்கடி தலைவலி வருவது ஏன்..?

நன்றி குங்குமம்

செக்கோஸ்லோவாகியாவிலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்த ஒரு மாணவி தன் பேராசிரியரிடம் வித்தியாசமான புகார் ஒன்றை தெரிவித்தார்.‘‘சார் உங்கள் அமெரிக்காவில் எழுத பேனா வாங்க சூப்பர் மார்க்கெட்டிற்கு போனால் போதும். ஆனால், வாங்குவதற்குள் எனக்குத் தலைவலி வந்துவிடுகிறது. ஒருநாள் கூட எங்கள் ஊரில் பேனா வாங்கும்போது எனக்கு தலைவலி வந்ததில்லை!’’ என்றார்.

தொடர்ந்து சில நாட்கள் இந்தப் புகாரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பேராசிரியருக்கு ஒரு விஷயம் புலப்பட்டது.நிற்க. உண்மையில் அந்த மாணவிக்கு வரும் தலைவலியைப் போன்றே ஒரு தலைவலியை நாம் தினமும் வாழ்க்கையில் சந்திக்கிறோம்! ஆனால், அதை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.  குழப்பமாக இருக்கிறதா? இப்போது அந்தப் பேராசிரியரின் விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையில் அந்த மாணவியின் புகாரை எடுத்து அந்தப் பேராசிரியர் விரிவாக ஆராய்ந்தார். அவர் cognitive psychology துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அந்த மாணவிக்கு தலைவலி வரக் காரணமாக இருந்தது சூப்பர் மார்க்கெட் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

 

எப்படி?

செக்கோஸ்லோவாகியா ஒரு கம்யூனிச நாடு. அங்கு தேவைக்கு மட்டும்தான் உற்பத்தி. எழுத பேனா வேண்டும் என்று கடைக்குச் சென்றால் ink pen, ballpoint pen,  இரண்டொரு வண்ணங்கள் என மொத்தமே ஐந்து அல்லது ஆறு வகையறாக்கள்தான் இருக்கும். அதுவும் அரசு நிறுவனம் தயாரித்ததாக மட்டுமே இருக்கும்.

ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. சுமார் 20 நிறுவனங்களின் பேனாக்கள் கடையில் இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் சுமார் 10 வகை பேனாக்களை  தயாரித்திருக்கும்!தங்கள் நாட்டில் பேனா வாங்கச் சென்றபோது அந்தப் பெண் நேராக கடைக்குச் சென்று தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்தாள்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த பேனாக்களில் எதை எடுப்பது எனத் திணறினாள். ஒவ்வொரு பேனாவின் தகவல்களையும் படிக்கத் தொடங்கி தன் மூளையில் அளவுக்கு அதிகமான தகவல்களை நிரப்பிக் கொண்டாள். இதனால் மூளை சூடாக... தலைவலி ஏற்பட்டிருக்கிறது!

இதுதான் உலகிலுள்ள நாம் அனைவரும் இன்று எதிர்கொள்ளும் பிரச்னை.இணையத்தின் உதவியால் நம்மை நோக்கி தகவல்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதை தகவல் சுனாமி என்றே சொல்லலாம்.

யோசித்துப் பாருங்கள். ஒரு நிமிடத்திற்குள் உங்களின் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பின்டிரெஸ்ட், மின்னஞ்சல், போன் கால்ஸ், மெசேஜஸ் வழியாக எத்தனை தகவல்கள் உங்கள் மேல் பாய்கின்றன? இதில் போன் நோட்டிஃபிகேஷன்ஸையும் சேர்த்தால் நொடிக்கு நொடி பிரேக்கிங் நியூஸ், தட்பவெப்பநிலை, நமக்குப் பிடித்த டிவி சீரியல், யூடியூப் சேனல் அப்டேட்ஸ்... ஆகியவற்றையும் சேர்க்கும்படி ஆகும்!

இத்தனை தகவல்களையும் நம் மூளை எதிர்கொள்கிறது. அவற்றைப் பகுத்தாய்ந்து முடிவு எடுக்கத் தள்ளுகிறது! மனித இனம் தகவல்களை உருவாக்கி சேமித்து வைக்கும் முறையைக் கண்டுபிடித்து சுமார் 5 ஆயிரம் வருடங்களாகின்றன. இத்தனை ஆண்டுகளாக சிறுகச் சிறுக மொத்த மனித இனமும் உருவாக்கிய தகவல்கள் அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் உருவாக்கி தனக்குள் சேமிக்கிறான்; பகிர்ந்துகொள்கிறான்!

இத்தனை தகவல்களையும் சேகரிக்கும் ஆற்றல்மிக்க டிஜிட்டல் சாதனங்களை மனிதன் உருவாக்கி இருக்கிறான் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால், புறத்துக்குத்தான் இது மகிழ்ச்சி அளிக்கும். அகத்துக்கு? வாய்ப்பே இல்லை.

நாம் ஒவ்வொருவரும் சேகரிக்கும் தகவல்களைச் சேமித்து பகுத்தாயும் அளவுக்கு நம் மூளை ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடையவில்லை! பரிணாமக் கோட்பாட்டின்படிதான் அது வளர்கிறது; இயங்குகிறது!

வருங்காலத்தில் நிச்சயம் நம் மூளை சூப்பர் மூளை ஆகும். ஆனால், இன்று?

தேவை என்று நினைத்து தேவையே இல்லாத பல தகவல்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. யோசித்துப் பாருங்கள். ஸ்பெயினில் இப்போது என்ன தட்பவெப்ப நிலை என்பது தமிழகத்தைச் சேர்ந்த நமக்கு எதற்குத் தேவை? பிரேக்கிங் நியூஸ் எல்லாமே நமக்குத் தேவைதானா? இந்த நொடியில் உலகம் முழுக்க என்ன நடக்கிறது என்பதை எல்லாம் நாம் அறிந்துதான் ஆகவேண்டுமா? நம் மூளையில் இவற்றை எல்லாம் சேகரித்துத்தான் தீர வேண்டுமா? இந்தத் தகவல் சுனாமியின் தாக்குதலால் நம் மனநலமும் உடல்நலமும் ஒருசேர பாதிக்கப்படுகிறது.

அப்படியெல்லாம் எந்த பாதிப்பும் இல்லை என காலரை உயர்த்துபவர்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.நீங்கள் செல்போனில் உலவிக் கொண்டிருக்கும்போது அல்லது இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும்போது திடீரென உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா, மனச்சோர்வு ஏற்படுகிறதா, எண்ணங்கள் அலைபாய்கிறதா, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதா, தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..? சந்தேகமே இல்லை. தகவல் சுனாமியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்!

Related Stories:

>