×

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லி : ஜம்மு - காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அந்த மாநில முன்னாள் முதல்வர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி டெல்லியில் திமுக தலைமையில் 14 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். இந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இடதுசாரி தலைவர்களான டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

ராஷ்திரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முஃதி, உமர் அப்துல்லா ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு  தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

ஜனநாயகத்தின் குரல் வலையை நெறித்து சட்டத்திற்கு புறம்பாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தற்போது வரை காஷ்மீர் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் காஸ்மெர் மக்களிடம் கருத்து கேட்காமல் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. காஷ்மீரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, மெகபூபா முஃதி, உமர் அப்துல்லா ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும்.
 
2. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த கோரி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. காஷ்மீரில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்த வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Former CM, Delhi, Police, Condemnation, Farooq Abdullah, Megabuba Mufti, Umar Abdullah
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...