×

காவல்துறை விளக்கத்தை ஏற்று, முகிலனை கண்டுபிடிக்க கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: காவல்துறை விளக்கத்தை ஏற்று, முகிலனை கண்டுபிடிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஹென்றி டிஃபேன்  தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான வீடியோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த 15ம் தேதி  சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அவர் அன்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். ஆனால், திண்டிவனத்தை தாண்டியதுடன் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதன் பிறகு அவரது தொடர்பு முற்றிலும் நின்றுவிட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, முகிலன் எங்கிருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்திருந்தது. விசாரணையை தொடரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து முகிலனை மீட்க கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் முகிலனை கடந்த ஜூலை  6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7-ம் தேதி தேதி கைது செய்திருப்பதாகவும், தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாக  சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விளக்கத்தை ஏற்று, முகிலனை கண்டுபிடிக்க கோரி ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags : Police, Mukhilan, Finished, High Court
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...