×

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டப்படவுள்ளது. இதையொட்டி திண்டுக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஓடைப்பட்டியில் ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை உருவாக்கப்படும் சிலைகள் திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட பல இடங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் அனுப்பப்படுகின்றன.

இந்த ஆண்டின் புது வரவாக பாலகணபதி, அரங்கநாதர், அத்திவரதர், கற்பக விநாயகர், சிங்கம் மற்றும் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள் என புதிய வகை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து செயற்கை முத்து மற்றும் ரத்தினங்கல் பொதிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. இதை அடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண், காகிதக் கூழ், கிழங்கு மாவில் இந்த சிலைகள் செய்யப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செயற்கை வண்ணத்திற்கு பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வாட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்படுகிறது. 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இவற்றின் விலைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ளதால் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Dindigul, Ganesha Chaturthi, statues, product, intensity
× RELATED அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...