×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தணிந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. உபரிநீர் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 22 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி, 16 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 14வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி, 23 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. பகல் 12 மணி நிலவரப்படி நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.39 அடியாக இருந்த நீர்மட்டம், 12 மணி நிலவரப்படி 116.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 87.84 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...