குமரியில் லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்டு தாக்கிய காவலரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கன்னியாகுமரி: குமரியில் லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்டு கடுமையாக தாக்குதல் நடத்திய காவலரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதி வழியாக கேரளாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. எனவே கடத்தலை தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லை பகுதிகளை சுற்றி 36 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இரவுப் பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும், அத்து மீறி தாக்குதல் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் தான் பேச்சுப்பாறை அணை புனரமைப்பு அணிகளுக்காக அப்பகுதியில் இருந்த சில வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் வினோ என்பவர் இடிக்கப்பட்ட தமது வீட்டில் இருந்த பொருட்களை லாரியில் ஏற்றி ஓட்டுக்கோணம் பகுதியில் உறவினர் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அந்த வழியில் உள்ள சோதனைச் சாவடியை கடக்கும் போது அங்கு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் ஒருவர் வாகன ஓட்டுநர் சஜூ என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஓட்டுநர் சஜூவிடம் பணம் இல்லாததால் தம்மிடம் இருந்த 400 ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த உதவி ஆய்வாளர் சஜூ மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளார்.

 இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த சஜூவை மீட்டு நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அத்துமீறி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசாரின் இத்தகைய அத்துமீறலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: