தேவகோட்டை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

சிவகங்கை: தேவகோட்டை அருகே போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், அங்கிருந்து 2,544 மதுபான பாட்டில்கள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சங்கரபதி நகர் பகுதியில், ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக சிவகங்கை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி ரோஹித்நாதன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நித்தியப்பிரியா மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்றனர். போலீசாரைக் கண்டதும், வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 2,544 குவார்ட்டர் மதுபான பாட்டில்கள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க தேவையான இயந்திரம், ரசாயன பவுடர், காலி பாட்டில்கள், லேபிள்கள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். இந்த மதுபான பாட்டில்கள் ஒரிஜினல் பாட்டில்கள் போல இருந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில், தேவகோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஒன்றரை மாதமாக, இந்த வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளார். இதற்கு முன்பு திருப்பூரில் போலி மதுபானம் தயாரித்து போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தேவகோட்டை வந்து தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த, சிவகங்கை மதுவிலக்கு போலீசார், தலைமறைவான ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். மேலும், இப்பகுதியை சேர்ந்த வேறு யாரும் இதில், சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் 2,500க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்கள் கணடுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: