×

பராமரிப்பு இல்லாததால் பாழாகி கிடக்கும் பனமரத்துப்பட்டி ஏரி

சேலம்: ஒரு காலத்தில் பசுமையின் பிறப்பிடமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரி, தற்போது பராமரிப்பு இல்லாமல் பாழாகி கிடக்கிறது. நீர்நிலைகளை பராமரிப்பதில் முனைப்பு காட்டும் தமிழக அரசு, இந்த ஏரியை கண்டு கொள்ளாதது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சேலம்-மேட்டூர் கூட்டுக்குடி நீர் திட்டம் வருவதற்கு முன்பே, மாநகர மக்களின் தாகம் தீர்த்த பெருமைக்குரியது பனமரத்துப்பட்டி ஏரி. 1911ம் ஆண்டு ஜருகுமலை அடிவாரத்தில் 2400 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. பேரூராட்சி பகுதியில் இருந்தாலும், இன்றுவரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான், பனமரத்துப்பட்டி ஏரி இருக்கிறது. சேலம் மாநகரில் இருந்து 20கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, பனமரத்துப்பட்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மட்டும் 356.45ஏக்கர். ஏரியின் ஆழம் 306 மீட்டர். கரையின் நீளம் 1,248 மீட்டர்.

இந்த ஏரிக்கு வரட்டாறு, கூட்டாறு மற்றும் ஜருகுமலை காப்புக்காடு பகுதியில் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பனமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சந்தியூர், ஆட்டையாம்பட்டி, அம்மாபாளையம், பள்ளிதெரு, பட்டி பள்ளி, குள்ளப்பநாயக்கனூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்றது. சேலம் மாநகருக்கு மேட்டூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, இந்த ஏரியின் தேவை குறைந்தது. தொடர்ந்து, இந்த ஏரியின் தண்ணீர் ராசிபுரம், நகராட்சி, பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் தொடர் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, ஏரியில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரி முற்றிலும் வற்றி வறண்டு கட்டாந்தரையாக மாறியது. வனத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம், தடுப்பணைகள் கட்டப்பட்டதால், ஏரிக்கான நீர் வரத்து தடைபட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஏரியில் தற்போது சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஏரி முழுவதும் காடு போல் காட்சியளிக்கிறது. இந்த ஏரியில் நீர்வரத்து இல்லாததால், அந்த பகுதியில் விவசாயம் பாதித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் பசுமைக்கு வித்திட்ட பனமரத்துப்பட்டி ஏரி மட்டும் வறண்ட பாலையாக காட்சியளிப்பது விவசாயிகள் மத்தியில் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சீமைக்கருவேல மரங்கள் வேரூன்றி நிற்பதால், ஏரியின் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அபாயம் விளைவிக்கும் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வர, இயற்கை எழில் சூழ்ந்த பனமரத்துப்பட்டியை சுற்றுலாத் தலமாக மாற்றி, பராமரிக்க முன்வர வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமன்றி, ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Lake Panamarampatti
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்