×

வழி நெடுகிலும் ஆக்கிரமிக்கப்பட்டது அம்பலம்... மானூர் கால்வாய் 35 கி.மீ. தொலைவுக்கு சீரமைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் குளத்திற்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயின் 35 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. சமூக சேவை அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 70 நாட்களுக்குள் இப்பணியை செய்து முடித்து அசத்தியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மழைவளம் சரியாக பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்கள் வறண்டதுடன் முள்செடிகள், குப்பைகளின் இருப்பிடமாகவும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும் சிக்கியது. இந்நிலையில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை மாவட்டத்தில் குளங்கள் மற்றும் கால்வாய்களை சீரமைக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.4938 லட்சம் மதிப்பில் 185 குளங்கள் சீரமைக்கும் பணி கடந்த சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகளையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் பல குளங்கள், கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. மாநகரில் மட்டும் 10 குளங்கள் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் உதவியுடன் சீரமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் 2வது பெரிய குளமான மானூர் பெரிய குளத்திற்கு சிற்றாற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய் நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் பெருமளவு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சுருங்கியது. இதனால் பெரிய குளத்திற்கு தண்ணீர் வருவதிலும் வழிநெடுக உள்ள பிற குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சிற்றார் செம்புலிபட்டிணத்தில் இருந்து மானூர் குளம் பகுதி வரை சுமார் 35 கி.மீ. தொலைவுக்கு கால்வாயை தூர்வார கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அனுமதி அளித்தார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக சமூக சேவை பிரிவு கண்காணிப்பாளரும், நெல்லை மண்டல முன்னாள் டீனுமான பேராசிரியர் சக்திநாதன், மானூர் விவசாய சங்கத் தலைவர் முகமது இப்ராஹிம், நம் தாமிரபரணி இயக்கத்தின் நல்லபெருமாள் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

கால்வாய் செல்லும் குறிப்பிட்ட 35 கி.மீ. தொலைவிலான பாதை முதற்கட்டமாக சர்வே செய்யப்பட்டது. பின்னர் பொக்லைன் உள்ளிட்டவைகளின் உதவியுடன் கால்வாய் ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை மின்னல் வேகத்தில் துவக்கினர். இவர்களுடன் பொதுப்பணித்துறை அலுவலர் மணிகண்டராஜ் உள்ளிட்டோரும் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். இப்பணியை கலெக்டரும் அடிக்கடி நேரில் வந்து பார்வையிட்டார். குறிப்பாக கால்வாய் சீரைமைப்பு பணிகளை பல கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று ஆய்வு செய்தார். இதன் காரணமாக 70 நாட்களில் இந்தப்பணி துரிதமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த 35 கி.மீ. தூர கால்வாய் தற்போது அதன் பழைய நிலையின் பெரும்பகுதியை அடைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள் இதை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Manor Canal
× RELATED குடியாத்தம் அடுத்த பனந்தோப்பு...