×

நாகை அருகே பாலையூரில் கட்டி முடித்து பல ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை

நாகை: நாகை அருகே பாலையூரில் கட்டப்பட்டு பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அருகே பாலையூரில் கடந்த 5 ஆண்டு காலத்திற்கு முன்பு மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் கட்டி முடித்தது பூஜைகள் போட்டவுடன் மூடப்பட்டது முதல் இதுநாள் வரை திறக்கப்படவே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த சுகாதார வளாகத்திற்கு வர்ணம் பூசப்பட்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டதாக கணக்குகள் எழுதி முறைகேடு செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நாகை ஊராட்சி ஒன்றியம் பாலையூர் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டு காலத்திற்கு முன்பு மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவே இல்லை. இதற்கு காரணம் இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் இல்லை.

தண்ணீர் தேவைக்காக போடப்பட்ட போர்வெல் இயங்கவே இல்லை. இதனால் சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு செய்யப்பட்டதாக கணக்கு மட்டும் எழுதப்படுகிறது. சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்தது போல் சுற்றுப்புற சுவர்களில் பெயிண்ட் அடித்து ஏமாற்றி வருகின்றனர். நாகை மாவட்டம் முழு சுகாதாரம் நிறைந்த மாவட்டமாக மாற வேண்டும். இதற்கு எல்லோரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கிராம சபை கூட்டத்தில் பேசினார். இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கட்டி முடித்த சுகாதார வளாகமே திறக்காமல் இப்படி முறைகேடு செய்கின்றனர். இதையும் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது. மகளிர் சுய உதவி குழு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வசம் இந்த சுகாதார வளாகத்தை ஒப்படைத்தால் அவர்கள் முறையாக பராமரிப்பு செய்து வருவார்கள். கிராம பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சுகாதார வளாகத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலையூர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Toilet
× RELATED சின்னாளபட்டியில் கழிப்பறைக்கு இல்லை...