வலங்கைமான் பகுதியில் 2 நாள் பெய்த மழையால் பருத்தி மகசூல் கடும் பாதிப்பு... விவசாயிகள் ஏமாற்றம்

வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் பருத்தியில் உரிய மகசூல் கிடைக்காத நிலையில் 2 நாள் பெய்த கனமழையால் பருத்தி இரண்டாவது மகசூல் கிடைக்காமலே பாதிப்பு ஏற்பட்டதால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவின் காரணமாகவும், கர்நாடகாவிடமிருந்து உரிய நீரை கேட்டு பெற தமிழக அரசு தவறியதாலும் பாசணத்திற்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதனால் கடந்த எட்டு ஆண்டுகளாக மூன்றுபோக சாகுபடி மேற்கொள்ளப்படாமல் ஒரு போக சம்பா சாகுபடியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இயல்பாக சம்பா அறுவடை ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஓரிரு நாட்களில் அறுவடை துவங்கியதால் அறுவடைக்குபின் கோடை சாகுபடியாக பயறு, மற்றும் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கால தாமதமாக சம்பா அறுவடை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பயறு உளுந்து சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியை அடுத்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

இதன் காரணமாக கோடையில் நெல்சாகுபடி தவிர்க்கப்பட்டது. பருத்திக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. பருத்தியின் வளர்ச்சிக்கு ஈரம் மட்டுமே போதுமானது.இதனால் கோடையில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டினர். பருத்திக்கு சில ஆண்டுகளாக உரியவிலை கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு வலங்கைமான் தாலுகாவில் பருத்தி சாகுபடி பாதியாக குறைந்தது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அதனையடுத்து சம்பா அறுவடைக்கு பின் லாயம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, சித்தன்வாளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பருத்தி விதைத்த நாள் முதல் உரிய மழை பெய்யாததால் பருத்தி அதிக பூச்சி தாக்குதலுக்கு ஆளானது. மேலும் கடும் வெப்பத்தின் காரணமாக பருத்தி பூக்கள் உதிர்ந்ததால் உரிய மகசூல் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 12 குவிண்டால் பருத்தி மகசூல் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 குவிண்டால் மட்டுமே மகசூலாக கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்திருந்தனர். இருப்பினும் பருத்தியில் இரண்டாவது ஈடாக அதிக அளவில் காய்கள் இருந்தன. இது விவசாயிகளை சற்று ஆறுதல் அடைய வைத்தது.

இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 97 மி.மீ அளவு மழை பெய்தது. அதன் காரணமாக பருத்தி செடிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனால் பருத்தி செடிகளின் வளர்ச்சி வேகம் குறைந்தும், காய்கள் உரிய வளர்ச்சி அடையாமலும், காய்கள் வெடிக்காமலும், வெடித்த காய்களில் உள்ள பஞ்சுகள் நனைந்ததை அடுத்து பருத்தி நிறம் மாறி வருகிறது. முதல் ஈட்டில் உரிய மகசூல் கிடைக்காத நிலையில் இரண்டாவது ஈட்டில் அதிக மகசூல் கிடைக்கும் என நம்பியிருந்த பருத்திவிவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். முன்னதாக டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா தாளடி என மூன்று போக சாகுபடி, அறுவடைக்குபின் பயறு, உளுந்து சாகுபடி என தொடர்ந்து வருமானம் ஈட்டி வந்த நிலையில் அவை அனைத்தும் விவசாயிகளுக்கு உரிய பலனளிக்காதததை போன்று தற்போது பருத்தியும் உரிய பலனளிக்காததால் பருத்தி விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: